Wednesday, 18 December 2013

தமிழன் சாதித்த கட்டிடகலை - கங்கைகொண்ட சோழபுரம்

இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான்.
கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் இருப்பதைப் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.



மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.



மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் இருப்பது போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.



இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுர கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம். (பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment