அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.
9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.