2000 ஆண்டு பழமையான கோவில் இது. திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன.
கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது.
இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.