இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.
ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.
மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம்.